slide

வீடியோ

செய்திகள்

கல்வி

சமூகம்

நிகழ்வு

இலங்கை

அட்டன் நகரை மரபுரிமை நகரமாக மாற்றியமைக்க அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் - அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர்

அட்டன் டிக்கோயா நகர சபையின் முதலாவது சபை அமர்வு 26.04.2018 அன்று நகர சபை தலைவர் சடையன் பாலசந்திரன் தலைமையில் கூடியது.

இதில் புதிதாக சபைக்காக தெரிவு செய்யப்பட்ட தலைவர் உட்பட 16 உறுப்பினர்கள் இந்த முதல் சபை அமர்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது அட்டன் நகர சபையின் முன்னால் தலைவர் கலாஞ்சென்ற அபுசாலி அவர்களுக்கு சபையினரால் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பில் அவரின் சேவைகள் பாராட்டப்பட்டு உரையாடலும் செய்யப்பட்டது.

அதன்பின் அட்டன் நகர சபை ஊடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான குழுக்கள் நியமிக்கப்பட்டது.

இதே நேரத்தில் சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உரையாடல்கள் இடம்பெற்றது. இந்த சமயத்தில் தலைவர் அட்டன் நகரில் எதிர்கால வேலை திட்டம் தொடர்பில் கருத்துகளை முன்வைத்தார்.

அவர் தனது கருத்தில் அட்டன் நகரத்தில் போதை பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பொவதாக தெரிவித்தார்.

அத்தோடு அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகள் தவிர்ந்த ஏனைய அரசியல் நடவடிக்கைகளுக்கு இம் மைதானத்தை பாவிப்பதற்கான அனுமதியை மறுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அட்டன் நகரில் பாரிய பிரச்சினையாக கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இடம் ஒன்றை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அட்டன் நகரை ஒரு மரபுரிமை நகரமாக மாற்றியமைப்பதோடு, நுவரெலியா மாநகர சபை ஊடாக முன்னெடுக்கப்படும் வசந்த கால நிகழ்வுகள் போன்று எதிர்காலத்தில் அட்டனிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அட்டன் நகரை அணைவரும் நேசிக்க கூடிய புதிய நகராக மாற்றியமைக்க அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கருத்துரைத்த அவர் அட்டன் நகர சபையை எதிர்காலத்தில் மாநகர சபையாக ஆக்குவதில் இலக்காக கொண்டே அபிவிருத்தி பணிகள் அனைத்தும், சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
க.கிஷாந்தன்)


தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலய மகா கும்பாபிஷேகம்

    தலவாக்கலை மாநகரில், அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலய மகா கும்பாபிஷேகம் 27.04.2018 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

இதனையொட்டி கிரியா நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் பிரதம குரு சிவஸ்ரீ. சோமாஸ்கந்த ரமேஷ் குருக்கள் தலைமையில் ஆரம்பமாகின. 25.04.2018 அன்று விஷேட பூஜைகள் இடம்பெற்று மாலை 4 மணி முதல், 26.04.2018 அன்று மாலை 4 மணி வரை எண்ணெய்க்காப்பு சாத்துதல் இடம்பெற்றது.

27.04.2018 அன்று இடம்பெற்ற கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, திருக்கல்யாணமும் இடம்பெற்றன.

கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து 48 தினங்களுக்கு மண்டலாபிஷேகமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
மூழ்கியது நாவலப்பிட்டி நகரம்

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையைத்தொடர்ந்து நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் 26.04.2018 அன்று மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.

நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியதனால் நீர் வெளியேறி வீதிக்கு செல்வதனால் பிரதான வீதியினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பாதைகளில் வெள்ளபெருக்கெடுத்ததுடன், நகருக்கு வருகைத்தந்தோர் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

க.கிஷாந்தன்)டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டக்குடியிருப்பு சுவர்களின் வெடிப்புகளுக்கு நில அதிர்வு காரணமில்லை

டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்திலுள்ள குடியிருப்பொன்றின் சுவர்களில் 26.04.2018 அன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்புகளுக்கு புவியதிர்வு காரணமல்ல என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் 5 ஆம் இலக்க லயன் குடியிருப்பின் சுவர்களில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் பீதிக்குள்ளாகினர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப அந்தத் தோட்டத்துக்கு விஜயம் செய்த மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்  நிலைமைகளை ஆராய்ந்ததோடு இடர் முகாமைத்துவ அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பதிகாரி போபிட்டியவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சுவர்களின் வெடிப்புக்கான காரணத்தை கண்டறியுமாறு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட ஆய்வாளர் மாலக்க ஹெட்டியாராய்ச்சி தரவளை மேற்பிரிவு தோட்டத்துக்கு விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தினார். இதன் போது மண்சரிவு அபாயமோ நிலத்தில் வெடிப்புக்களோ கண்டறியப்படவில்லை. மேலும் இலங்கையில் எப்பாகத்திலும் 26.04.2018 அன்று எவ்விதமான நில நடுக்கமும் பதிவாகவில்லை என்ற தகவலை உரிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அறிய தந்தார்.

குறிப்பிட்ட தோட்டக்குடியிருப்பின் சுவர்களில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குக் காரணம் இந்தக்குடியிருப்பு 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த நிலையிலுள்ளமையேயாகுமென்று தெரிவித்தார்.

இந்த நிலையில் டிக்கோயா தோட்ட முகாமையாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தொடர்ந்து வெடிப்புக்கள் ஏற்படகக்கூடிய நிலையிலுள்ள சுவர்களைக் கொண்ட வீடுகளைக் கொண்ட இரண்டு குடும்பங்களைத் தற்காலிக இருப்பிடமொன்றில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் குறிப்பிட்ட குடியிருப்பைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு வேறு இடமொன்றில் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப முன்னெடுப்பதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டது.
க.கிஷாந்தன்)